search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை திறப்பு"

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதகுகள் சீரமைப்பு ‌ஷட்டர்கள் வர்ணம் பூசுதல் போன்ற பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    பூதலூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்காக நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வருகிற 22-ம் தேதி அதிகாலை கல்லணை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    மேட்டூர் அணை 109 அடி அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் காவிரி பாசன பகுதி விவசாயிகள் நிம்மதியாக ஒரு போக நெல் சாகுபடி செய்யலாம் என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.

    பொதுப்பணித்துறை பணியாளர்கள் உற்சாகமாக மதகுகள் சீரமைப்பு, கிளை வாய்க்கால் தலைப்புகள் சுண்ணாம்பு அடித்தல், ‌ஷட்டர்கள் வர்ணம் பூசுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பூதலூர் கல்லணை கால்வாய் பகுதியில் வைரப்பெருமாள் பட்டி கிராமத்தின் அருகில் அமைந்துள்ள கதவணையில் ‌ஷட்டர்களுக்கு, அணைக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு வருகிறது.

    அதே போல் கல்லணை தலைப்பில் இருந்து பூதலூர் வரை உள்ள கல்லணை கால்வாய் கிளை வாய்க்கால் தலைப்புகளுக்கும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளும் உற்சாகமாக விவசாய பணிகளை தொடங்கி விட்டனர்.
    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தண்ணீரை திறந்துவிட்டார். #Metturdam #Cauvery #EdappadiPalaniswami
    மேட்டூர்:

    தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது.

    கால தாமதமாக அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பயிர்களும் கருகியது. இந்த ஆண்டும் கடந்த மாதம் 12-ந் தேதி குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து நேராக மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது.

    நேற்று அணைக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 1 லட்சத்து ஆயிரத்து 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்து உள்ளது. அணை நிரம்ப இன்னும் 11 அடி தான் தேவைப்படுகிறது.

    பொதுவாக நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்போது நீர்வரத்தும் சீராக இருந்தால் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 109 அடி தண்ணீர் இருப்பதால் அணையில் இருந்து 19-ந் தேதி (இன்று) பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.



    இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.

    இந்த தண்ணீர் அணையின் மதகு வழியாக சீறிப் பாய்ந்து வெளியேறியது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

    முதலில் அணையின் வலதுகரை பகுதியில் மேல்மட்ட மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணை கட்டி 84 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக முதல்-அமைச்சர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு சென்று வந்த அனைத்து வழிகளின் கதவுகளும் பூட்டப்பட்டன. பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் உத்தரவின்றி கதவுகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



    மேட்டூர் அணையில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிப்பதால் அதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர். அவர்கள் மேட்டூர் அணை பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery #EdappadiPalaniswami
    டெல்டா மாவட்டங்கள் ஆறுகள், நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல ஏரி, வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #DeltaFarmers #MetturDam
    தஞ்சாவூர்:

    கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு மேட்டூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் 96 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருகிற 19-ந் தேதி திறக்கப்படும் என்று நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கர்நாடகத்தில் பெய்த தொடர் மழையால் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டு அகண்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை ஏரி, குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். குடிமராமத்து பணிகள் 25 சதவீதம் தான் முடிந்துள்ளது.

    ஏற்கனவே டெல்டா மாவட்டங்கள் ஆறுகள், நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். முறைப்பாசனம் இன்றி காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், ஆறுகளில் பிரித்து அனுப்பி நீர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.

    கடலில் ஒருசொட்டு நீர் கூட கலந்து வீணாக்காமல் அனைத்து நீரையும் விவசாயத்திற்கே பயன்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுவரை திறக்கப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடைமடை பகுதி வரை சென்றது இல்லை.

    கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். அப்போது தான் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகளும் இதில் பயன்பெற முடியும்.

    மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தங்குதடையின்றி செல்ல ஏரி, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    விவசாயிகளுக்கு தேவையான நெற்கதிர், உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க வேண்டும்.

    தற்போது தமிழக முதல்-அமைச்சர் 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்திருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DeltaFarmers #MetturDam
    ×